சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 400க்கும் அதிகமானவர்கள் மனுக்களை பெற்றுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்காகவும் மனுக்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் திண்டிவனம் தனித் தொகுதியில் போட்டியிடுவதற்கு விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளரான கோ. அய்யனார் விருப்ப மனு அளித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்ட மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனம்பாட்டு கிராமத்தைச் சேர்ந்தவரான கோ.அய்யனார், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பை முடித்ததன் காரணமாக தொகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர் என கூறப்படுகிறது.
முதுகலை பட்டமும், சட்டப்படிப்பில் முதுநிலை படிப்பை முடித்து 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிவரும் 51 வயதான கோ.அய்யனார், திமுக-வில் கிளைக் கழக செயலாளர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தற்போது மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியின் ஆதரவாளரான கோ.அய்யனார், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி ஆகியவற்றில் போட்டியிட பல முறை விருப்பமனு கொடுத்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், எம்.எல்.ஏ.-வாக இருந்த சீத்தாபதி சொக்கலிங்கம் மீண்டும் வாய்ப்பை பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளரிடம் தொகுதியை பறிகொடுத்து, தோல்வியடைந்தார்.
அதனால் அய்யனார் இந்த முறை திண்டிவனம் சட்டமன்ற தொகுதி சீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன், தலைமை கழகத்தில் முக்கிய தலைவர்களை சந்தித்து தனது களப்பணி குறித்து எடுத்துக்கூறி தொகுதியில் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து வருகிறார்.
கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் உடன் பழகுவதில் எளிமையானவர் போன்ற பண்புகளுடன், மக்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார் என்கிற கூடுதல் பலத்துடன் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளதால், திண்டிவனம் தொகுதி வேட்பாளராக கோ.அய்யனார் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112301567z-arun-2026-02-07-16-52-57.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/25/a-2026-02-25-17-14-32.jpg)