'Is being a cleaner a slob?' - beaten and beaten Photograph: (chennai)
சென்னையில் பெண் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அண்மையில் அரசுப் பேருந்தில் ஏறிய பெண் தூய்மைப் பணியாளர்களை பேருந்து ஓட்டுநர் ஆபாசமாக பேசியதாக பெண் பணியாளர்கள் பேருந்தை மறித்து போராட்டம் நடத்தியதோடு பெண்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இப்ராஹிம் சாஹித் மெயின் ரோடு அருகே உள்ள பூங்கா அருகில் பெண் தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவ்வழியாக வரும் பெண்களிடம் தகாத முறையில் பேசியிருக்கிறார். நேற்று முன்தினமும் இதே செயலில் அந்த முதியவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று அந்த பகுதியில் நடந்து சென்ற பெண் தூய்மைப் பணியாளரிடம் தகாத செயலுக்கு அழைக்கும் ''பணம் தருகிறேன் வா...'' என மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் துணிச்சலாக அந்த முதியவரை கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார். பின்னர் அந்த பெண் பணியாளர் சொன்னதை கேட்டு அதிர்ந்த பொதுமக்கள் சிலரும் அந்த முதியவரை தாக்கியதோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அந்த முதியவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தூய்மைப் பணியாளர் மட்டுமல்லாது இளம்பெண் ஒருவரும் அந்த முதியவர் மீது புகார் கொடுத்துள்ளனர். பல நாட்களாகவே நபர் அந்த வழியாகச் செல்லக்கூடிய பெண்களிடம் ஆபாசமாக பேசி அத்து மீறுவதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
Follow Us