திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,''தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகளை மூடியது தான் திமுகவின் சாதனை, பள்ளிகளை மூடுவதற்கு முன்பாக அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்ட வேண்டிய விஷயம். ஏற்கனவே இயங்கி வந்த அரசுப் பள்ளி மூடுவது சரியில்லை. தமிழகத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக ஆட்சியில் நிறைய அரசுப் பள்ளிகளை ஏற்படுத்தினோம். அப்பொழுதுதான் அறிவுப்பூர்வமான மாணவர்களை உருவாக்க முடியும் என்ற ஏழை எளிய மாணவர்கள் அந்தப் பகுதியில் கல்வி கற்க வேண்டும் என அதிகமாக திறக்கப்பட்டது. இந்த ஆட்சியில் கல்வியில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமார் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இது வருத்தமும் வேதனையும், அளிக்கிறது. இதற்கு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் .
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. முன்பெல்லாம் தங்கம் விலை என்ன நிலவரம் வெள்ளி விலை என்ன நிலவரம் என இருந்தது. இப்பொழுது கொலை என்ன நிலவரம் என ஆகிவிட்டது.
மேலும் போதைப்பொருள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.
முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுகவில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி அருகில் அமர்ந்திருந்த அதிமுகவின் தம்பிதுரை பதிலளிக்க முன்றபொழுது ''இருண்ணா...'' எனக் கையை தட்டிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ''உட்கட்சி விவகாரம் குறித்து நீங்கள் (செய்தியாளர்கள் ) கேட்காதீர்கள். உட்கட்சி விவகாரம் குறித்து பகிரங்கமாகப் பேச முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. அந்த கட்டுப்பாட்டின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதைப் பொதுவெளியில் பேசுவது சரியாக இருக்காது'' என்றார்.