சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

Advertisment

அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நல்லகண்ணுஅதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

nallakannu-bw

தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர்.

Advertisment

சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர். சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணுவின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தோழருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி அவரது பெருமைக்கு மேலும் புகழ் சேர்த்தார். 

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணுவின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.