Irregularities in ghee distribution at Sabarimala; Devotees upset Photograph: (sabarimalai)
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோல், பாரம்பரிய வரலாறு கொண்ட து என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய மாதங்களில் சபரிமலைக்கு பெருந்திரளான பக்தர்கள் வருவது வழக்கம். அப்போது மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக இரண்டு மாத காலங்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பிற மாதங்களில் முதல் 5 நாட்கள் மட்டும் நடை திறக்கப்படும்.
இந்நிலையில் புகழ் பெற்ற இந்தக் ஐயப்பன் கோயிலில், தற்போது எழுந்துள்ள ஒரு சர்ச்சை பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய் விநியோகம் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாலக்காடு, அனுக்கிரக வீட்டைச் சேர்ந்தவர் பிரேமன். இவரிடம் கவுண்டர்களில் விநியோகம் செய்யப்படும் ‘அடிய சிஷ்டம்' நெய்யை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியை கோயில் நிர்வாகம் ஒப்படைத்திருந்தது. இந்த பணிக்காக, அவருக்கு ஒரு பாக்கெட்டுக்கு ரூ. 0.20 வீதம் வழங்கப்படுகிறது. இதற்காக, பேக்கிங் இயந்திரம், பேக்கிங் பொருட்கள் மற்றும் நெய் உட்பட பேக்கிங்கிற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கோயில் நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது.
அதன்படி, 700 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு எஃகு தொட்டி உள்ளது. அதில் மோட்டார் மூலம் நெய் நிரப்பப்படுகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு பாக்கெட்டுக்கும் 100 மில்லி லிட்டர் நெய் நிரப்பப்படும். பின்னர் அந்த பாக்கெட்டுகள், பக்தர்களுக்கு ஒரு பாக்கெட் ரூ. 100 என்ற விலையில் விநியோகிக்கப்படுகிறது. இது தவிர, மஞ்சள், குங்குமம், திருநீறு போன்ற பிற விற்பனைப் பொருட்களுக்கும் இதே போன்று பாக்கெட் செய்யும் நடைமுறைகள் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2025 நவம்பர் 17 முதல் 2025 டிசம்பர் 26 வரையிலான காலகட்டத்தில், ஒப்பந்தக்காரர் தலா 100 மில்லி கொண்ட 3,52,050 பாக்கெட்டுகளை, கோயில் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார். இதில், சுமார் 89,300 பாக்கெட்டுகள் பல்வேறு நாட்களில் மராமத்துப் கட்டிடத்தில் உள்ள விற்பனை மையத்தில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், அந்த 89,300 பொட்டலங்களில், 143 பொட்டலங்கள் சேதமடைந்ததாகக் கணக்கு காட்டப்பட்டது. மேலும், 28 பாக்கெட்டுகள் மீதம் இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும், சேதமடைந்த 143 பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை மையத்தில் மீதமிருந்த 28 பாக்கெட்டுகள் போக, மீதமுள்ள 89,129 பாக்கெட்டுகளுக்கான விற்பனைத் தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், விற்பனை மையப் பொறுப்பில் இருந்த ஊழியர்கள் 75,450 பாக்கெட்டுகளுக்கு உரிய பணத்தை மட்டுமே செலுத்தியுள்ளனர். மீதமுள்ள, 13,679 பாக்கெட்டுகளின் விலையான ரூ. 13,67,900-ஐ கணக்கில் காட்டவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வளவு தொகை கணக்கில் குறைந்திருப்பது கவலை அளிப்பதாகவும், இந்த செயலை கணக்கில் ஏற்பட்டுள்ள சாதாரண தவறு என்று புறக்கணிக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைக்குமாறு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
அதே வேளையில், 2வது, 3வது மற்றும் 5வது கட்டங்களில் பணியாற்றியதாகக் கூறப்படும் சுனில் குமார் பொட்டி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடந்த தங்க திருட்டு வழக்கு பக்தர்களுக்கிடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது நெய் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ள விஷயம் பக்தர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us