உலக பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடியது திருத்தணி முருகன் கோவில். இங்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலின் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 27ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில், பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

கந்த சஷ்டி விழாவில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகளவில் இருந்ததாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தாமல் காவல்துறையும் கோயில் நிர்வாகமும் பக்தர்களை பல மணி நேரம் மழையில் நிற்க வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் முக்கிய விஐபிக்களின் குடும்பத்தினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர்.  

Advertisment

t2

இதுகுறித்து பேசிய பெண் பக்தர் ஒருவர், “நாங்கள் பல மணி நேரம் குழந்தைகளை வைத்துகொண்டு சிக்கித் தவிக்கிறோம். எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடும் சரியாக செய்யாமல், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் சிறப்பு வழியில் உள்ளே அனுப்புவது நியாயமா? கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நனைந்தபடி காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் கந்த சஷ்டி திருக்கல்யாணம் நிகழ்வை பல சிரமத்திற்கு மத்தியில் சாமி தரிசனம் செய்தோம். ஆனால், கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள், விஐபிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் சிறப்பு வழியில் சென்று தரிசனம் செய்தனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார்.

t3

இவரைத் தொடர்ந்து சிதம்பரம் என்ற மாற்றுத்திறனாளி நம்மிடம் பேசியபோது, “இரண்டு மணி நேரம் காத்திருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழி இல்லை என்று எங்களை வெளியேற்றுகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதை கெடுக்கும் வகையில், இந்த அதிகாரிகள் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. அனைத்து அலுவலகங்கள் கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை இருக்கும்போது திருத்தணி முருகன் கோவில் மட்டும் விதிவிலக்கா? ஏன் மாற்றுத்திறனாளி என்றால் சாமி தரிசனம் செய்ய கூடாதா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அதனை தொடர்ந்து நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத சமூக ஆர்வலர், “இந்த கோயிலின் உண்டியல் காணிக்கையை திருடிய விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் இந்த அராஜகத்தை இங்கு அரங்கேற்றி வருகின்றனர். தர்ம தரிசனம் மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசனம் என்ற இரு வழி இருந்தாலும் கோயில் நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், விஐபிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வெகு நேரம் முருகனின் அருகிலே நிற்க வைத்து தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

t4

அதே நேரம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா.வேலுவின் உறவினர் ரவி. இவருடைய மனைவியான உஷாரவி என்பவர், அறங்காவல் குழுவில் உள்ளார். இந்த உஷாரவி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அழைத்து வருகிறார். அதே போல், அமைச்சர் சேகர்பாபுவின் நெருக்கமான மோகன் என்பவரும் அறங்காவலர் குழுவில் உள்ளார். இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார், மற்றொருவர் அறங்காவல் குழுவை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் அமைச்சர் சேகர் பாபுவுக்கு வேண்டப்பட்டவர். மேலும் ரியல் எஸ்டேட் சங்கமான கடாய் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஸ்ரீதரன் அறங்காவல் குழு சேர்மேனாக செயல்பட்டு வருகிறார். இவர் திமுகவை சேர்ந்த அண்ணா நகர் கார்த்திக்கிற்கு வேண்டப்பட்டவர். இந்த குழுவை சேர்ந்தவர்கள் வைத்தது தான் திருத்தணி முருகன் கோவிலில் சட்டம். இதை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. மேலும், இக்கோயிலின் இணை ஆணையர் ஆன ரமணி உடன் கூட்டு சேர்ந்து சில முறைகேடுகளை ஈடுபட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த முறைகேடுகள் சம்பந்தமாக திருத்தணி முருகன் கோயிலின் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணியை பலமுறை தொடர்பு கொண்டும், செல்போனை எடுக்கவில்லை. அதே போல், இந்த விவகாரத்தில்  அமைச்சர் சேகர்பாபுவையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கிடையில், திருத்தணி முருகன் கோவிலில் நடந்தேறிய இத்தகைய சம்பவங்கள் பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.