Iran targets Azerbaijan situation intensifies
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இஸ்ரேல் மட்டுமல்லாமல் சவூதி, பக்ரைன், கத்தார் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளவாடங்களும் தாக்குதலுக்குள்ளாகின. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தாக்குதல், இன்றளவும் முடிவிற்கு வராமல் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், ஈரான் அமெரிக்கப் போர்க்கப்பல், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல்கள் எந்த திசையை நோக்கிப் பயணிக்கிறது, இது எங்குப் போய் முடியும் என்று புரியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் பல நாடுகள் வருத்தம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முடியுள்ளதால், கச்சா எண்ணெய் வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலான மிகப் பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஈரானின் இந்த பதில் தாக்குதலால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அஜர்பைஜான் நாட்டில் உள்ள நக்சிவன் சர்வதேச விமான நிலையத்தை ஈரானின் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமான நிலையம் ஈரானின் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில், ஈரான் நாட்டின் திசையில் இருந்து வந்த இரண்டு ஏவுகணைகள் இந்த நாட்டில் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஒன்று விமான நிலைய கட்டிடத்தின் மீது மோதியதாகவும், மற்றொன்று ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் அருகே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிர் இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஈரானின் இந்த செயல் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்த செயல் பிராந்திய நாடுகளிடையே பதற்றத்தை உருவாக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow Us