ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.இதையடுத்து, ஈரானின் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் நேற்று (28.02.2026) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது.
மேலும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்க நட்பு நாடுகளான இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்றிலேயே மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறந்த அமெரிக்கர்களுக்கும், கமேனி மற்றும் அவரது இரத்தவெறி பிடித்த குண்டர் படையால் கொல்லப்பட்ட அல்லது படுகாயம் (உடல் உறுப்புகளை இழந்தவர்கள்) அடைந்த உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் கிடைத்த நீதியாகும்.
எங்களது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதால், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட பிற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்க இதுவே மிகச்சிறந்த வாய்ப்பாகும். ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை , ராணுவம் மற்றும் இதர பாதுகாப்பு மற்றும் காவல் துறையைச் சேர்ந்த பலர் இனி போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கோருவதாகவும் தகவல்கள் வருகின்றன. நான் நேற்று இரவு கூறியது போல, "இப்போது அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கலாம், பிறகு அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும். ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் ஈரான் தேசபக்தர்களுடன் அமைதியாக இணைந்து, இந்த நாட்டிற்கு உரிய பெருமையை மீண்டும் கொண்டு வர ஒரு குழுவாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
அந்தச் செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும்; கமேனியின் மரணம் மட்டுமல்லாது, ஒரே நாளில் அந்த நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, ஏன் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் எங்களது இலக்கை அடையும் வரை, துல்லியமான குண்டுவீச்சு இந்த வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை தடையின்றி தொடரும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரானின் அதியுயர் (உச்சப்பட்ச) தலைவர் கமேனி தெஹ்ரான் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கமேனி தெஹ்ரான் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், 7 நாட்கள் பொது விடுமுறையும் விடப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Follow Us