தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 2025 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றார். ஜெர்மனியில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நிறுவனங்கள் சுமார் ரூ.7,020 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார், அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனத் துறையில் மின்கல சேமிப்பு அமைப்புகளுக்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ஆஸ்டிராஜெனீகாவின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முன்னர் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்களின் வழியாக ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 17,613 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவை வெறும் எண்கள் அல்ல; இவை வாய்ப்புகள், எதிர்காலங்கள் மற்றும் கனவுகள். இது திராவிட மாடலின் செயல் வடிவில் உள்ள மனவுறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.