புதுக்கோட்டையில் மதுபோதையில் இளைஞர்கள் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் ஒத்தக்கடை பகுதியில் அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் கடைவீதி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு இளைஞர் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். சில இளைஞர்கள் சாலை தடுப்புகள் மற்றும் கடைகளில் முன்பு இருந்த போர்டுகள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை சாலைக்கு எடுத்து வந்து போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

மேலும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்நிலைய காவல் ஆய்வாளர் செந்தூரப் பாண்டியன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சண்முகம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வீடியோவை ஆதாரமாக வைத்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.