சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் சமீபத்தில் பெறப்பட்டன. மனுக்கள் பெறப்பட்ட கையோடு அவர்களிடம் நேர்காணலைத் தொடங்கி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக - பாஜக கட்சிகளிடையே வெளிப்படையான தொகுதி உடன்பாடுகள் கையெழுத்து ஆகாத நிலையில் நேர்காணலை அவர் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் கட்சிகளிடம் புருவத்தை உயர வைத்துள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இந்த நேர்காணலை நடத்தி வருகிறார் எடப்பாடி.
அந்த வகையில், இதுவரை 3 நாட்கள் நேர்காணல் நடந்துள்ளது. நான்காவது நாளாக இன்று காலை திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை (கிழக்கு), தென் சென்னை (மேற்கு) ஆகிய அதிமுகவின் கட்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து இருக்கிறார்.
இன்று மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் முதலில் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. அதன்பின்னர், சென்னை புறநகர், வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு) ஆகிய கட்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதுவரை நடந்த நேர் காணலில் கலந்து கொண்டவர்களிடம், தொகுதியின் நிலவரம் என்ன? தொகுதியில் எந்த சமூகத்தினர் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள்? அவர்களின் வாக்கு வாங்கி எவ்வளவு? உங்கள் தொகுதியில் திமுகவின் செல்வாக்கு எப்படி? திமுக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? நடிகர் விஜய்க்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா? உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்றெல்லாம் அதிரடியாக கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, "உங்கள் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியை வெற்றியடைய வைப்பீர்களா?" என்றும் எடப்பாடி கேட்டுள்ளார்.
Follow Us