Advertisment

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - டெண்டர் கோரியது தமிழக அரசு!

coimbatore--stadium-tn-govt

மாதிரிப்படம் (சித்தரிக்கப்பட்டவை)

கடந்த ஆண்டு நடைபெற்ற நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் வலைத்தளத்தில், “கோயம்புத்தூர் முழுவதும் பிரச்சாரம் செய்தபோது விளையாட்டு மீது ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவை இளைஞர்களின் ஆர்வம் ஈடு இணையற்றது. இது 3 தமிழ்நாடு பிரிமியர் லீக் அணிகளின் (TNPL) உரிமையாளர்களின் தாயகமாகும். 

Advertisment

மேலும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் தமிழகத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். எனவே கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இளைஞர்களின் திறமைகள் வெளிக்கொணருவதற்கும், தமிழ்நாட்டில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூரில் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு வசதிகள் கொண்ட சர்வதேச அளவிலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை நிறுவ வேண்டும் என முதலமைச்சரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்களின் வளமான விளையாட்டு திறமைகளை வளர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisment

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், கோயம்புத்தூரில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். இந்த மைதானம் சென்னையின் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச மற்றும் தரமான கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும். அரசும் விளையாட்டுத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.  

tn-sec

இதனையடுத்து இந்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கத் தமிழக அரசு  சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் இந்த திட்டம் என்பது செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிரிக்கெட் மைதானத்துடன் இணைந்து வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது. 

அதன்படி கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் 20 ஏக்கரில் கிரிக்கெட் மைதானமும் 10 ஏக்கரில் வணிக வளாகமும் அமைக்கப்பட உள்ளது. சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரையில் அமரும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம், உணவகம், உயர்தர இயற்கை வசதி, உட்புற பயிற்சி அரங்கம், கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த 3 வாரத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tender Stadium tn govt international cricket stadium Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe