கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு என ஒருங்கிணைந்த மாவட்ட விசிக செயலாளராக கனியமுதன் என்பவர் இருந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தை கிழக்கு, மேற்கு, மத்தி, மாநகரம் என நான்காகப் பிரித்த விசிக தலைமை, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக தருமபுரி மாவட்டம் ஜருகு கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரை நியமித்தது. இவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்து விலகி விசிகாவில் இணைந்தவர். மாதேஷ் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் நேரடியாக மாவட்ட செயலாளர் பொறுப்பை வாங்கியதாலும், உள்ளூர் விசிகவினர் அவரை எதிர்த்து வந்தனர்.
தொடர்ந்து நிர்வாகிகள் இன்றி தன்னிச்சையாகத் தனக்கென்று சிலரை வைத்துக்கொண்டு மாதேஷ் அரசியல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மண்டல செயலாளரான தமிழ் அன்வர் என்பவரை 3 மாத காலம் இடைநீக்கம் செய்ததுடன் கிருஷ்ணகிரியில் நுழைவதற்குத் தடை எனத் தனது லெட்டர் பேடில் மாதேஷ் அறிக்கை வெளியிட்டார். தனக்கு மேல் உள்ள மண்டல செயலாளர் ஒருவரை மாவட்ட செயலாளர் நீக்கியும், கிருஷ்ணகிரிக்குள் நுழையவும் தடை விதித்தது விசிகவினர் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகள் மத்தியிலும் கேலிக்கூத்தாக மாறியது.
இந்தச் சூழலில்தான் கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், அதன்பிறகு போராட்டம் என்றால் அது சூளகிரி மட்டும்தான் நடத்தப்படும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்படி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் சாதிப் பிரச்சினையைத் தூண்டும் விதமாக மாதேஷ் பேசி வந்துள்ளார். குறிப்பாகக் கூட்டணியில் இருக்கிறோம் என்பதையும் மறந்து ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷை அவருடைய சாதிக்கு மட்டுமே சப்போர்ட் செய்வதாகவும், தைரியமாக இருந்தால், ஆம்பிள்ளையாக இருந்தால் தலித் மக்கள் ஓட்டு தேவையில்லை எனக் கூறட்டும் எனப் பொதுவெளியிலேயே பேசி வந்தார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் ஓட்டுப் போட்டதால்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதலமைச்சர் நாற்காலியில் உள்ளதாகவும் விமர்சித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சூளகிரியில் விசிக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமாரை வாடா, போடா, நாயே...., நீ ஆம்பளையா எனக் கடுமையான சொற்களால் அவதூறாகப் பேசியுள்ளார். அதேபோல் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியையும் ஒருமையில் வசைபாடியிருந்தார். இது குறித்து அதிமுகவினர் விசிக தலைமையிடம் வீடியோ ஆதாரத்துடன் கொடுத்த புகாரின் பேரில் மே மாதம் 27-ம் தேதி மாவட்ட செயலாளரான மாதேஷ் 3 மாத காலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி கட்சியில் மாதேஷ் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார். தொடர்ந்து எந்த ஒரு நிர்வாகிகளுடனும் சேராமல் தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் நவம்பர் 12-ம் தேதி அதே சூளகிரி ரவுண்டானாவில் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துக் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாகக் கூறி, தனது பெயர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் என 2 பேரின் பெயர்களை மட்டும் நோட்டீசில் அச்சடித்து விநியோகம் செய்து வந்தனர்.
அதற்காகச் சூளகிரி காவல் நிலையத்திலும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி தர முடியாது எனக் கூறி அதற்கான நோட்டீசையும் மாதேஷிடம் வழங்கிக் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். இந்த நிலையில் காவல்துறையின் அனுமதியை மீறி 12-ம் தேதி காலை 10 மணியளவில் மாதேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்திற்கு வந்து அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த விசிக மண்டலத் துணைச் செயலாளர் ஜிம் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன் மற்றும் நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த மாதேஷிடம், “யாரைக் கேட்டுப் போராட்டம் நடத்துற, மக்களிடம் பணத்தை வாங்கிக்கிட்டுப் பட்டா வாங்கித் தர்றதா பொய் சொல்லிப் போராட்டம் நடத்துறியா?, போராட்டம் நடத்துறேன்னு நிர்வாகிகள் கிட்ட சொன்னியா? நோட்டீசில யார் பேரையுமே போடாம உன் இஷ்டத்துக்குப் பண்றியா?” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், “தலைவரிடம் சொல்லிட்டோம், அவர் நடத்தக்கூடாதுன்னு சொல்லிட்டார், நீ கூட்டத்த நடத்தாத” எனவும் வாக்குவாதம் செய்தனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் மற்றும் டி.எஸ்.பி. பாஸ்கர் ஆகியோர், “உங்க உள்கட்சிப் பிரச்சினையை ரோட்டுல பேசாதீங்கப்பா, போய் உங்க ஆபிஸ்ல பேசிக்கோங்க” என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அங்கிருந்த கட்சியினரோ, “ஆபிஸ் எல்லாம் இல்ல, டீக்கடைதான் இவர் ஆபீஸ்” என மாவட்ட செயலாளர் மாதேஷைப் பார்த்துக் கூறினர். அதற்கு மாதேஷும் “ஆமாம் எனக்கு வசதியில்லை, எனக்கு டீக்கடைதான் ஆபீஸ்” என்று கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்த வந்த மாதேஷ் தரப்பினரைக் கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் மாதேஷ் அவர்களை அழைத்துச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போராட்டக்காரர்களைப் போலீசார் பேருந்தில் ஏற்றிச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கு சென்ற மாதேஷ் பொதுமக்களை உசுப்பேத்தும் வகையில், நாம் மண்டபத்தில் இருந்தே காத்திருப்புப் போராட்டத்தை நடத்தலாம், வெளியே யாரும் போகக்கூடாது, பெண்கள் வேண்டுமானால் போகட்டும் எனக் கூறினார். ஆனால் மாலை 6 மணி ஆனவுடன் விட்டால் போதும் என அங்கிருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாதேஷ், தான் மாவட்ட செயலாளர் என்பதையும் மறந்து, என்னை மாவட்ட ஆட்சியரா போட்டு 2 ஆண்டு நிறைவு பெற்றது என்றார். மேலும், ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் மூன்று நான்கு முறை நேரடியாகப் போய்க் கூப்பிட்டேன், யாரும் ஒத்துழைக்கவில்லை, தற்போது வந்தவர்கள் எல்லாம் போராட்டத்தைச் சீர்குழைக்க வந்தவர்கள் என்றார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் விசிகவிற்குள் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்திருப்பது கட்சியினர் மத்தியிலும், தலைமை மத்தியிலும் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.
Follow Us