Intensifying monsoon rains - 'Orange alert for 7 districts' Photograph: (rainfall)
நவ்.15ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நேற்று இரவு முதல் வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வந்த நிலையில் இன்று (17/11/2025) நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் காரைக்கால் மாவட்டத்திலும் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (17/11/2025) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோவிலில் 9 சென்டிமீட்டர் மழையும், தங்கச்சிமடத்தில் 8 சென்டி மீட்டர் மழையும், தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழியில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், பாம்பன், புதுச்சேரி, மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Follow Us