இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, சிக்கிம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள், தங்கள் முக அமைப்பு காரணமாக இந்தியாவின் பெரு நகரங்களில் அடிக்கடி இனவாத அவமானங்களை எதிர்கொள்கின்றனர். இது ஒரு நீண்டகால சமூகப் பிரச்சினையாக இருக்கிறது. இதனால், சொந்த நாட்டு மக்களையே வெளிநாட்டவர்கள் அல்லது சீனர்கள் என்று அந்நியப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அதிலும், வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்காக் வடகிழக்கு மாநிலங்களை விட்டு வட இந்திய மாநிலங்களுக்கு பயணிக்கும் மக்களுக்கு, வேலைவாய்ப்பு மறுப்பு, வாடகைக்கு வீடு மறுப்பு, பணியிடங்களில் வார்த்தைகளாலும், உடல் வன்முறையாலும் அவமானப்படுத்துதல் உள்ளிட்ட துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் கொரோனா காலகட்டத்தில் அவமரியாதைகளையும், தாக்குதல்களையும் சந்தித்தனர்.
இந்த நிலையில், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தான் ஒரே நாளில் எதிர்கொண்ட இரு இனவெறி சம்பவங்களைத் துயரத்துடன் விவரித்திருக்கிறார். மேகாலயாவைச் சேர்ந்த அந்த இளம்பெண், டெல்லியில் நடந்து சென்றபோது, அவரை சீனர் என்று அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்துள்ளனர். மேலும், அங்கிருந்து மெட்ரோவில் சென்றபோதும், ஒருவர் சீன மொழியில் பேசி, பலரது முன்னிலையில் நகைச்சுவையாக சிரித்து அவமரியாதை செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் டெல்லி தெருவில் நடந்து சென்றபோது, ஸ்கூட்டரில் வந்த ஆண்கள் குழு எனது தோற்றத்தைப் பார்த்து, ‘சியோங் சியோங்’ என்று அழைத்தனர். நான் உடனே அவர்களைப் பார்த்தேன். ஆனால், அவர்கள் ஏதோ வேடிக்கையைப் பார்த்ததைப் போல நகைச்சுவையாகச் சிரித்து கேலி செய்தனர். பின்னர், நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். அதே நாளில், மெட்ரோவில் பயணிக்கும்போது, ஒரு பயணி என்னிடம் வந்து, ‘சிங் சாங் சீனா’ என்று சத்தமாகச் சொன்னார். பிறகு, அவர் ஏதோ நகைச்சுவை சொன்னதைப் போலத் தனக்குத் தானே சிரித்துக்கொண்டு என்னைக் கேலி செய்தார். ஆனால், இதை அங்கிருந்த யாரும் தட்டிக் கேட்கவில்லை. இப்படி, சக இந்தியர்களால் நாங்கள் வெளிநாட்டவரைப் போல நடத்தப்படுவது வேதனையளிக்கிறது. நான் எனது சொந்த மண்ணில் ஒரு அந்நியராக உணர்கிறேன்,” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “நீங்கள் என்னை மட்டும் அவமதிக்கவில்லை; வடகிழக்கு மக்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்; ஆனால், இன்று நான் உண்மையிலேயே இந்தியரா என்று நினைக்க வைத்துவிட்டீர்கள்,” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பாதிக்கப்பட்ட பெண் #StopRacism மற்றும் #VoiceOfNortheast ஹேஷ்டேக்குகளுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், பலரும் இளம்பெண்ணுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா, பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள், இனங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்களைக் கொண்டுள்ளது. அதனால், இந்த வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையைக் காணும் விதமாக, “வேற்றுமையில் ஒற்றுமை” கொண்ட நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது. அந்த நற்பெயருக்கு களங்கம் வராமல், அனைவரும் ஒரு நாட்டினர் என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது.