Advertisment

“இல்லாத பழக்கத்தைப் புகுத்தாதீர்கள்” - திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் ரகுபதி!

raguthirup

inister Raghupathi criticizes the Thiruparankundram verdict

கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (06-01-26) தீர்ப்பு வழங்கியது.  அதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்றும், மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும், மலை முழுவதும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறையின் அறிவுறுத்தலோடு தீபத்தூணில் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு கார்த்திகை தினத்தின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மற்ற மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தனர்.

Advertisment

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இதுவரைக்கும் இல்லாத ஒரு பழக்கத்தை வழக்கத்தை நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு மூலமாக உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும். எங்களை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க அந்த தீர்ப்பை நாங்கள் எதிர்க்கிறோம். இது தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான ஒன்று. எங்களுக்கு தெரிந்தவரை தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான வரலாறு சான்று நூறாண்டு காலத்துக்கும் கிடையாது. அது தீபத்தூண் என்பதற்கான ஆதாரம் சமர்பிக்கப்பட்டதா? அந்த சர்வேக்கள் ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்டது. மலை உச்சியில் இருப்பதாக் கொஞ்சம் உயரமான கல்லாக நடப்பட்டது.

நாயக்கர் காலத்திலோ, ஆங்கிலேயர்கள் காலத்திலோ, ராஜாஜி காலத்திலோ காமராஜர் காலத்திலோ எந்த காலத்திலும் அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா? இல்லாத ஒன்றை ஏன் நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி. தீபத்தூணிலே தீபம் ஏற்றியதற்கான சான்றுகளும் ஆதாரங்களும் கிடையாது. இதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒரு சாரார் இதில் புகுந்து விளையாட பார்க்கிறார்கள். எனவே, நாங்கள் அதை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உண்டு. இதுவரை எந்த ஆதாரமும் இல்லாத ஒரு இடத்தில், எதற்காக இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து தமிழ்நாட்டில் ஒரு குழப்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய  கேள்வி.

நீதிமன்றம், அரசாங்கத்தின் மீது எந்த குற்றச்சாட்டையும் சொல்லலாம். ஆனால் அன்றைக்கு அரசாங்கம் தடுக்காவிட்டால், அங்கே போய் தீபம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். எனவே தான், மாவட்ட ஆட்சியர், காவல்துறை போன்றவர்கள் எல்லாம் சரியான நேரத்தில் 144 தடை உத்தரவு போட்டு யாரும் மலை உச்சிக்கு  செல்லாமல் பாதுகாத்தார்கள். பாதுகாக்கின்ற உரிமை அரசுக்கு உண்டு. எனவே இதை அன்றைக்கு விட்டிருந்தால் அது தொடர்ந்து அது பழக்கமாக வந்திருக்கும். எனவே அந்த அந்த பழக்கம் வரக்கூடாது. இல்லாத ஒரு பழக்கத்தை புகுத்தாதீர்கள் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. பா.ஜ.க, தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் மதக் கலவரங்களை உருவாக்க வேண்டும் என்கின்ற ஒரு லட்சிய நோக்கத்தோடு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நிச்சயமாக தமிழ்நாடு மக்கள் இடம் கொடுக்க  மாட்டார்கள்” என்று கூறினார். 

madurai high court ragupathi Thiruparankundram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe