பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவால் கடந்த 1998ஆம் ஆண்டு கேரளா தேவஸ்தானம் போர்டுக்கு 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் அந்த தங்கமானது தங்கக் கவசமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து தங்கக் கவசத்தை செப்பனிட்டுக் கொடுப்பதாகக் கூறி பெங்களூருவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவஸ்தானம் சார்பில் நகைகள் கொடுக்கப்பட்டது. அதன்படி தங்கக் கவசம் செப்பனிடப்பட்டு, அதனைத் தேவஸ்தானம் போர்டு திரும்பப் பெற்றுக் கொண்டது.
இத்தகைய சூழலில் தான் கேரளா உயர் நீதிமன்றத்தில் சபரிமலை கோவில் சிறப்பு ஆணையர் உயர் நீதிமன்ற அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘என்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தங்கக் கவசம் செப்பணியிடும் பணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சபரிமலை தங்கத்திருட்டு வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது சபரிமலை தங்கத் திருட்டு வழக்குத் தொடர்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில் துவார பாலகர் சிலை மட்டுமின்றி மேலும் 7 தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டுள்ளது. அதாவது துவார பாலகர் சிலை மட்டுமின்றி தங்கமுலாம் பூசப்பட்ட கருவறையின் கதவின் மேற்புறத்தில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட சிவன் சிலை, யாடி ரூபம், ராசி தகடுகள் உள்ளிட்டவற்றிலும் இருந்து தங்கம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/01/sabarimalai-2026-01-01-23-42-47.jpg)
சென்னை நிறுவனத்தில் வைத்தே ரசாயன கலவை மூலமாகத் துவார பாலகர் சிலை அதன் பீடத்தில் இருந்து தங்கம் எடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலை மற்றும் அதன் பீடத்தில் இருந்து எடுத்த தங்கத்தை மறைக்க, அது தொடர்பாகவும், சபரிமலை சிலையில் இருந்து திருடப்பட்ட 109 கிராம் தங்கம் சென்னை தனியார் நிறுவன உரிமையாளர் வந்தாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தில் 475 கிராம் கர்நாடக நகைக்கடை அதிபர்களிடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிலை மற்றும் அதன் பீடத்தில் இருந்து எடுத்த தங்கத்தை மறைக்க அது தொடர்பான ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
சிலை புதுப்பிப்பதற்குக் கூலியாக 109 கிராம் தங்கம் பெறப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை நிறுவன அதிபர் பங்கஜ பந்தாரி உள்ளிட்டவர்களும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சபரிமலையில் மேலும் பெருமளவு தங்கத் திருட்டு நடந்திருப்பதால் முதல் குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போட்டியைக் காவலில் எடுக்க எஸ்ஐடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us