information released Russia helping Iran
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று தொடங்கிய இந்த போர் இன்று வரை முடிவுக்கு வராமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் இருதரப்பிலும் தாக்குதல் வேகமெடுத்து வரும் நிலையில், மேற்காசிய நாடுகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. இதனால், அந்த பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த போரை முடிவிற்குக் கொண்டுவந்து மேற்காசிய நாடுகளின் பதற்றத்தைத் தணிக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்துள்ளது. அந்த வகையில், ரஷ்யாவும் இந்த கருத்தை வலியுறுத்தி வந்தது. மேலும் ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரானைச் சுற்றியுள்ள ராணுவத் தளவாடங்கள் உட்பட அமெரிக்காவின் நிலைகளைத் தாக்குவதற்கான ரகசியத் தகவல்களை ஈரானுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக, அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கண்காணிக்கவும், தாக்கவும் இந்த தகவல்கள் உதவியுள்ளதாகப் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுதங்களை வழங்கியதாகத் தகவல்கள் வெளியானது. தற்போது, நடந்து வரும் போரில் ஈரானுக்கு ரஷ்யா மறைமுகமாக உதவி வருவதாக வெளியாகி உள்ளதால் மேலும், பதற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், ‘யார் யாருடன் பேசுகிறார்கள் என்பது எங்கள் அதிபருக்கு நன்றாகத் தெரியும். இதற்கான எதிர்வினைகள் கடுமையானதாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
Follow Us