தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (06.11.2025) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசு உயர் அலுவலர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் அரசியல் கட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் இருந்தால் ஒரு லட்சமும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் இருந்தால் 3 லட்சமும், 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் இருந்தால் 8 லட்சமும், 50 ஆயிரத்திற்கும் மேல் இருந்தால் 20 லட்சம் வரை காப்புத்தொகையை வசூலிக்க நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த தொகையை நிகழ்ச்சி நடத்துபவர்கள் உரியப் படிவத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உட்கோட்டத்தில் உள்ள அதிகாரியிடம் வழங்க வேண்டும். அதில் எதிர்பார்க்கப்படும் கூட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இடத்தின் கொள்கைக்கு உட்பட்டு இருக்கும் எனில் அந்த இடத்தை குறிப்பிட வேண்டும். மனுவைப் பொறுத்தவரையில் அங்கீகரிப்பட்ட இடத்தில் நடத்தப்படும் என்றால் 10 நாட்களுக்கு முன்னதாகவும் 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும்
அங்கீகரிக்கப்படாத மாற்று இடத்திற்கு 21 நாட்களுக்கு முன்னதாக மனு அளிக்க வேண்டும். முதலுதவி மையங்கள், அவசரக் கால மருத்துவ ஊழியர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தன்னார்வலர்களின் விவரங்கள் அனைத்தும் மனுவில் குறிப்பிடப்பட வேண்டும். இது குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். அதன்படி நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட நேரத்தில் நடத்த வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்பு ஒழுங்கு முறைக்கு அமைப்பாளர்கள் பொறுப்பு ஆவார்கள். பொது மற்றும் தனியார் சொத்திற்குச் சேதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். இதற்கான உறுதிமொழிகளை அளிக்க வேண்டும். சாலை வலம் (ரோட்ஷோ) நடத்த அனுமதி கோரும் மனுக்களுக்குக் கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/06/road-show-meeting-2025-11-06-15-40-58.jpg)
அதன்படி ரோடு ஷோ நடத்த உள்ள வழித்தடம், உரை நிகழ்த்த உள்ள இடங்கள், ரோட்ஷோ தொடங்கும் இடத்திற்கும் முடிவுக்கு வரும் இடத்திற்கும், சிறப்பு விருந்தினர் வருகை தரக்கூடிய நேரம், உரை நிகழ்த்தும் இடத்திலும் எதிர்பார்க்கப்படும் கூட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும். இந்த மனுவை கூர்ந்தாய்வு செய்து அனுமதி அளிப்பதைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும். ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான காரணம் எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்கப்படும். நிகழ்ச்சி நடத்தும் இடத்தை பொறுத்தவரையில் குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து, அதிக ஆபத்து என்று வகைப்படுத்தப்படும். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டு அதற்கான அனுமதியானது வழங்கப்படும்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குறிப்பிட்டதை விட 50%த்திற்கும் அதிகமாகக் கூட்டம் கூடினால் அது தீவிர விதிமீறலாகக் கருதப்பட்டு காப்புத்தொகை பிடித்தம் செய்யப்படும்” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வரும் 10ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கருத்துக்களைப் பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow Us