தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களைக் குறி வைத்து சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பானது நடைபெற்று வருகிறது. அதாவது கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? எனக் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் அதனைக் கருக்கலைப்பு செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூரை அடுத்துள்ள காக்கங்கரை பகுதியில் 8 கர்ப்பிணிப் பெண்கள் ஆட்டோவில் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் வந்த ஆட்டோ பழுதாகி நின்றது. இது குறித்து அங்கிருந்தவர்கள் விசாரணை செய்யும் போது கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனக் கண்டறிய வந்தோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் அவர்களைப் பிடித்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதற்கு முக்கிய மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர்கள் 5 பேரைக் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
மேலும் மருத்துவராக பணியாற்றி வரும் சாமநகர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (வயது 60) என்பவர் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்ததும் தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் வெளியே வந்த பிறகும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் மோசடியில் ஈடுபட்ட நிலையில் இவரை கந்திலி போலீசார் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். ஆளில்லா வீடுகளை ஒருநாள் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக ஸ்கேன் செண்டர் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.