வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டடிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (02.11.2025) காலை 10.00 மணி அளவில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல் உணவகம் ஒன்றில் நடைபெற்றது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார். அதில், “மக்களின் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும், மக்களை அச்சுறுத்தக் கூடிய விதமாகவும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. இதேபோல தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழகம் தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய மிக முக்கியமான தேவை இருக்கிறது. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கூட கொடுக்கவில்லை.
பதற்றம் இல்லாத சூழலில் இதனை செய்ய வேண்டும்.அப்போது தான் அதற்கான பணிகளை முறையாக செய்ய முடியும். மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது உண்மையாக வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரத்தமாகவே பார்க்கப்படும். ஆகவே பீகாரில் செய்வதை தான் இங்கு செய்யவேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க ஜனநாயக ரீதியாக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்கான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்கு 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Follow Us