தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியலானது இன்று (06.01.2026) வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 15 கோடியே 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 2  கோடியே 89 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்த வாக்காளர்களில் இது 18% எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின்   எண்ணிக்கையானது 12.55 கோடியாகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 18 சதவீத மக்கள் இன்னும் எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்பவில்லை எனவும், அதனுடைய பணிகளும் நடைபெற்று வருவதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எஸ்.ஐ.ஆர். படிவங்களை வழங்கப் பிப்ரவரி 6ஆம் தேதி வரை கால அவகாசமானது வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த ஒரு மாத கால இடைவெளியில் உரிமை கோரல்கள், வாக்காளர்கள் தங்களுடைய பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்வது தொடர்பான படிவங்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச தலைமை தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த கணக்கெடுப்புப் படிவங்களின் எண்ணிக்கை தோராயமாக 12 கோடியே 55 லட்சம். அதாவது, இவ்வளவு பேர் கையெழுத்திட்ட படிவங்களைத் திருப்பி அனுப்பி, தங்கள் பெயர்கள் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 46.23 லட்சம் இறந்தவர் வாக்காளர்களாக இருந்தனர். 2.17 கோடி வாக்காளர்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

eci

வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட 25.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்..மொத்தத்தில் 2.89 கோடி பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக, எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 15.18% வாக்குகள் நீக்கப்பட்டன. அதாவது எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டன. எஸ்.ஐ.ஆருக்கு முன்னதாக 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment