கடலூரில் கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் சாலையில் சென்றவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் என பலரை கண்மூடித்தனமாக கற்களால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தனியார் மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் அங்கு காவலாளியாக பணியாற்றி வந்த கார்த்திக் என்பவரை கஞ்சா போதையில் வந்த பாலாஜி, சிவா, கந்தவேல் என்ற மூவர் கற்கள் மற்றும் கம்பிகளைக் கொண்டு தாக்கினர். அதேபோல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன் என்ற  இருவரையும் இந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.

மேலும் அங்கு வந்த அரசு பேருந்தை வழிமறித்த அவர்கள் ஓட்டுநர் கணேசனை தாக்கியுள்ளனர். இப்படியாக கஞ்சா போதை இளைஞர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட கந்தவேல், பாலாஜி, சிவா ஆகிய மூன்று நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போதை இளைஞர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.