இண்டிகோ விமானச் சேவைகள் நிறுவனத்தின் பணியாற்றும் விமானிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாக பல்வேறு இண்டிகோ பயணிகள் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறையால் சென்னை விமான நிலையத்தில் 6வது நாளாக இன்றும் (07.12.2025) இண்டிகோ விமானச் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அதாவது சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல வேண்டிய 50 விமானங்களும், அதேபோன்று வெளி ஊரிலிருந்து சென்னை வரக்கூடிய 50 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது குறித்து முன்னதாக உரியத் தகவலானது விமான பயணிகளுக்குத் தராததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணிப்பதற்காக வந்திருந்த  சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் குவிந்தனர். 

Advertisment

அப்போது விமானம் ரத்து செய்யப்பட்டது என அறிவிப்பு வெளியானதால் இண்டிகோ விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கவுண்டரில் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து பயணக் கட்டணத்தைப் பயணிகள் திரும்பப் பெற்று வருகின்றனர். ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு இண்டிகோ விமான நிறுவன கவுன்ட்டர்களில் பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.