India's response to Trump claim India Won't Buy Russian Oil
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது.
இந்த சூழலில், ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா என்ணெய் வாங்கப்போவதில்லை என பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (15-10-25) தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிரம்ப்பிடம், இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக கருதுகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஆம் கண்டிப்பாக. பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய நண்பர். நாங்கள் சிறந்த உறவுடன் இருக்கிறோம். ஆனால், இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என அவர் இன்று எனக்கு உறுதியளித்தார். மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி. அடுத்ததாக நாங்கள் சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைக்கப் போகிறோம்” என்று தகவல் தெரிவித்தார்.
தேசிய நலனுக்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து வாங்கும் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், நேற்று டிரம்ப் இவ்வாறு பேசியிருப்பது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். இந்தியா ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதிக்கிறது. பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். இந்திய நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷர்ம் எல்-ஷேக்கைத் தவிர்த்திருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து டிரம்ப் பேசியதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்கப்போவதில்லை என பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூற்று குறித்து மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்கள் இறக்குமதிக் கொள்கைகள் முழுமையாக இந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன.
நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது எங்கள் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இதில் எங்கள் எரிசக்தி ஆதாரங்களை பரந்த அளவில் அடிப்படையாகக் கொண்டது. மேலும், சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமான வகையில் பன்முகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.