Indian tourist seeks help for held in Russia
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு 12 பேருடன் செய்த ஒரு இந்திய சுற்றுலாப் பயணி, ரஷ்ய குடியேற்ற அதிகாரிகளால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அமித் தன்வார் என்ற இந்தியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று யார் நினைத்தாலும், இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவானவை என்று யார் நம்பினாலும், அது ஒரு கட்டுக்கதை. 12 இந்திய சுற்றுலாப் பயணிகளுடன் தேவையான மற்றும் செல்லுபடியான அனைத்து ஆவணங்களுடன் கடந்த ஜூலை 8ஆம் தேதி மாஸ்கோவில் தரையிறங்கினோம். அப்போது குடியேற்றத்தால் 3 பேர் மட்டுமே அனுமதிப்பட்டனர். மீதமுள்ளவர்கள் எந்த விளக்கமும் இல்லாமல் மணிக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எங்கள் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எங்களை பின்தொடருங்கள் என்று கூறி மற்ற இந்திய பயணிகள் நிறைந்த ஒரு மூலையில் உட்காரச் சொன்னார்கள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு தனி அறைக்கு மாற்றப்பட்டோம். அங்கு குடியேற்ற அதிகாரிகள், எங்களுடைய மொபைல் போன், போட்டோக்கள், கூகுள் ஹிஸ்டரி மற்றும் யூடியூப் செயல்பாடு உள்ளிட்டவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் வரை சோதனையிட்டனர். அதிகாரிகள் தங்களுக்குள் ரஷ்ய மொழியில் மட்டுமே பேசினார்கள். பின்னர் நாங்கள் நாடு கடத்தப்படுவதாக எங்களுக்குத் தெரிவித்தனர். அதன் பின்னர், நாங்கள் ஏற்கெனவே மக்கள் நிரம்பிய ஒரு அறைக்கு மாற்றப்பட்டோம். அவர்கள் சிலர் 2-3 நாட்களாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.
எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு பூட்டிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம். நாடு கடத்தப்படுவதற்கான காரணம் குறித்து யாரும் எந்த தகவலும் இல்லை. நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறோம். எங்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகிறார்கள். நாங்கள் உதவியற்றவர்களாகவும் அவமானப்படுத்தப்பட்டவர்களாகவும் உணர்கிறோம். இங்குள்ள அதிகாரிகளை பார்த்து நாங்கள் மிகவும் பயப்படுகிறோம். புகார் அளிக்கவோ அல்லது பகிரங்கமாகப் பேசவோ கூட தயங்குகிறோம். எப்போது விடுவிக்கப்படுவோம் என்று தெரியாமல் நாங்கள் இங்கு சிக்கித் தவிக்கிறோம். அதற்கு 2-3 நாட்களோ அல்லது 4-5 நாட்களோ ஆகலாம். இதில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகமும், பிரதமர் நரேந்திர மோடியும் தலையிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் பல இந்தியர்கள், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்காகப் போராடத் தள்ளப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.