உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கபில் கவாட் (Kapil Kavad). இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட் பிரிவில் பணியாற்றி வரும் கபில் கவாட், விடுமுறைக்காக மீரட்டில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில், தனது விடுமுறையை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரவு டெல்லி விமான நிலையத்திற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து ஸ்ரீநகருக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, டெல்லி விமான நிலையத்திற்கு செல்வதற்காக, தனது உறவினர் சிவம் என்பவருடன் மீரட்டில் இருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் வீடு இருக்கும் பகுதிக்கு அருகே இருந்த புனி(Bhuni) சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அதனால், விமானத்திற்கு தாமதமாகிவிடுமோ என்ற அச்சத்தில், காரை விட்டு இறங்கி வந்த கபில் கவாட், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது ராணுவ அடையாள அட்டையைக் காண்பித்து, “விமானத்திற்கு நேரமாகிவிட்டது, விரைவாக செல்ல அனுமதியுங்கள்” என்று கேட்டிருக்கிறார். அத்துடன், அவர் வசிக்கும் பகுதி கட்டண விலக்கு பெற்ற பகுதி என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் கபில் கவாட்டின் வாகனத்தை செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணுவ வீரர் கபில் கவாட்டிற்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இந்த வாக்குவாதம் இரு தரப்பிற்கும் இடையே மோதலாக மாறியது. சுமார் 8 முதல் 10 சுங்கச்சாவடி ஊழியர்கள், ராணுவ வீரர் கபிலையும், அவரது உறவினர் சிவமையும் கடுமையாகத் தாக்கினர். மேலும், ராணுவ வீரர் என்று கூட பார்க்காமல், அவரை அருகே இருந்த கம்பத்தில் கட்டி வைத்து, கட்டையால் அடித்து உதைத்துள்ளனர்.
இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக கபிலின் தந்தை சரூர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு நான்கு பேரைக் கைது செய்தனர். மேலும், மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மிஸ்ரா, “ராணுவ வீரர் கபில் கவாட், விடுமுறை முடிந்து பணியிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, புனி டோல்கேட்டில் ஊழியர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றவர்களையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்வோம்” என்றார்.
சுங்கச்சாவடி ஊழியர்களால் ராணுவ வீரர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ராணுவ வீரர்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றும், இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.