Indian-origin man Zohran Mamdani wins newyork mayoral election
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, நியூயார்க்கில் மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவா, ஜனநாயகக் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியான ஜோரான் மம்தானி, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், 50.4% வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப்பின் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட கர்டிஸ் ஸ்லிவா வெறும் 7% வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.
இந்த தேர்தல் வெற்றி மூலம், நியூயார்க்கில் மேயராக பதவியேற்கும் முதல் இஸ்லாமியர், முதல் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஜோரான் மம்தானி பெற்றுள்ளார். மேலும், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க்கின் இளம் மேயர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இந்தியாவின் பூர்வீகத்தைக் கொண்ட மம்தானி உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்தார். இவரது தந்தை உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தான், தாய் சலாம் பாம்பே, நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒடிசாவைச் சேர்ந்த மீரா நாயர்.
ஜோரான் மம்தானி, தனது குழந்தைப் பருவத்தின் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் தனது குடும்பத்துடன் கழித்தார். அதன் பின்னர் 7 வயதில் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த சிறிது காலத்திலேயே 2018இல் அமெரிக்கக் குடிமகனாக ஆனார். 34 வயதான மம்தானி, மாநில சட்டமன்ற உறுப்பினரும், தன்னை ஜனநாயக சோசலிஸ்டாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, குடியேற்ற கொள்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்த மம்தானி, டிரம்ப்பின் வேட்பாளரை தோற்கடித்து மேயராக வெற்றி பெற்றிருப்பது டிரம்ப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மம்தானி, வரும் ஜனவரி 1ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்கவுள்ளார்.
Follow Us