அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் வாழ்ந்து வந்தார் இந்தியரான விஜயகுமார் (51). இவர் தனது மனைவி மீமு டோக்ரா (41) மற்றும் 12 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்களுக்குள் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், உறவினர் வீட்டில் நடந்த தகராறில், விஜயகுமார் தனது மனைவியைச் சுட்டுக் கொன்றுள்ளார். அதே நேரத்தில், உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரையும் சுட்டுக் கொன்றுள்ளார். 

Advertisment

இந்த துப்பாக்கிச் சூடுச் சம்பவத்தினைக் கண்டு அதிர்ச்சியடைந்த, விஜயகுமாரின் மகன் மற்றும்  நிதி-ஹரிஷ் தம்பதியினரின் 7 மற்றும் 9 வயதுக் குழந்தைகள் உட்பட 3 குழந்தைகளும் அங்கிருந்த அலமாரியில் ஒளிந்து கொண்டனர். அவ்வாறு ஒளிந்து கொண்டதால், அந்த குழந்தைகள் இந்த கொடூர சம்பவத்திலிருந்து உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிர் தப்பித்த விஜயகுமாரின் 12 வயது மகன், 911 எண்ணிற்கு அழைத்து சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த 4 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், "விஜயகுமார் மற்றும் மீமு டோக்ரா தம்பதியினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு  ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்கள் தங்களது 12 வயது மகனை அழைத்துக்கொண்டு, ப்ரூக் ஐவி கோர்ட்டில் வசிக்கும் தங்களின் உறவினரான நிதி-ஹரிஷ் தம்பதியினரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கேயும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் விஜயகுமார் தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூன்று பேரையும் சுட்டுக்கொன்றார்" எனத் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து, அடிலாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப்  பதிவில், "குடும்பத்தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment