காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இரு நாடுகளும் கடந்த மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாக்குதல் நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடந்தது என்ன என்பது குறித்து முதல்முறையாக விமானப்படை தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார். அப்போது அவர், “திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதாலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எஸ்-400 மூலமாக 5 பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, ஒரு ரடார் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் தான், இந்தியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் விமான தளங்கள் மற்றும் ராணுவ தளங்கள் ஆகியவற்றை தாக்கியது. பாகிஸ்தான் மிகப்பெரிய அளவிலேயே இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் எடுத்தாலும் இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு கேடயம் மூலமாக 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவமோ அல்லது விமானப்படையோ விவரங்களை வெளியிடாத நிலையில் முதல் முறையாக விமானப்படைத் தளபதி வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொடர்பு கொண்டு பேசியிருக்கக்கூடிய நிலையில், தற்போது விமானப்படைத் தளபதி இந்த விவரங்களை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், எஸ் 400 பாதுகாப்பு கேடயத்தை ரஷ்யாவிடம் இருந்து தான் இந்தியா வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.