பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு நிறுவனத்தில், பொறியாளராக பணிபுரிந்து வருபவர் விஷ்ணு. இவர், தனக்கான உணவை சொமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம், சில நாட்கள் முன்புஆர்டர் செய்துள்ளார்.அவருக்கு வந்த உணவு மோசமான நிலையில் இருந்ததால், அதை டெலிவரி கொண்டுவந்த இளைஞரிடமே திருப்பி அளித்தார். அந்த இளைஞர் ஏற்க மறுத்தபோது, தன் பணம் தனக்கு திரும்ப வேண்டும் என விஷ்ணு கூறியுள்ளார். இதனால், கூகுளில் சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் எனத் தேடினால் வரும் முதல் எண்ணுக்கு அழைத்தால், அவர்களே தங்கள் பணத்தை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள் என டெலிவரி பாய் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, கூகுளில் முதலில் வந்த வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, சிறிது நேரத்தில் தனக்கு சொமேட்டோவில் இருந்து பேசுவதாகக் கூறி ஒருவர் அழைத்ததாக விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Advertisment

100 ரூபாய் பில் தொகையை திரும்பி வழங்குவதாகவும், பணத்தை திரும்பப்பெற 10 ரூபாய்க்கான பிராசஸிங் கட்டணத்தை தாங்கள் அனுப்பும் லிங்க்-கை கிளிக் செய்து டெபாசிட் செய்யுமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி, 10 ரூபாய் செலுத்திய சில விநாடிகளில், பே.டி.எம். கணக்கு மூலம் பல முறை தனது வங்கிக் கணக்கில் இருந்த 77 ஆயிரம் ரூபாய் வரை அடுத்தடுத்து எடுக்கப்பட்டுள்ளது. யோசிக்கக் கூட இடமில்லாமல், சில நிமிடங்களில் நடந்ததை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்தார் விஷ்ணு. தற்போது காவல்நிலையம், வங்கி என பல இடங்களுக்கு சென்று புகார் தெரிவித்துள்ளபோதும், இதுவரை தனக்கான பணம் திரும்ப கிடைக்காததுடன், சரியான பதில்களும் வரவில்லை என்று விஷ்ணு ஆதங்கப்பட்டு கூறியுள்ளார்.