Skip to main content

வணக்கம் தமிழ்நாடு - வருத்தம் தெரிவித்தது ஸோமேட்டோ!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

ZOMATO

 

ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.

 

இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.

 

இந்தநிலையில், சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது ஸொமேட்டோ. மேலும் இந்தியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறிய அந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்துள்ளது.

 

இதுதொடர்பாக ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

 

‘வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

 

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்). மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

 

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஸொமேட்டோ தனது ட்விட்டர் பதிவில், தங்களது வாடிக்கையாளர் சேவை மைய முகவரின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தயவுசெய்து ஸொமேட்டோவைப் புறக்கணிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.