புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு அந்நாட்டு தேசிய கொடிகளையும் எரித்தனர். மேலும் இந்த புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பீகார் மாநிலம் கயாவில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் அந்நாட்டு தேசிய கொடியை எரித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.