Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; நண்பனைக் குத்திக் கொலை செய்த இளைஞர்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Youth incident  friend in Puducherry

 

புதுச்சேரி மாநிலம் குருசுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தன். 24 வயதான இவர், செல்லப்பிராணிகளான நாய்களை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகன் தேவாவும், முகுந்தனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முகுந்தன் எங்கு சென்றாலும் தனது நண்பனான தேவாவை, தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

 

இத்தகைய சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, முகுந்தன் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரம்யாவிற்கு தாய், தந்தை என யாரும் இல்லை. ரம்யாவை அவருடைய சித்தி கோமதி தான் வளர்த்து வந்தார். ஆனால், கோமதியோ கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ஆரம்பத்தில், ரம்யாவுடன் வசித்து வந்த கோமதி தன் மகளுக்குத் திருமணம் ஆனதால் தனிமையில் வாழ வேண்டிய சூழல் உருவானது.

 

இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட  முகுந்தன் - ரம்யா தம்பதியினர் கோமதிக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அந்த சமயத்தில், தனது நண்பனான தேவா, அடிக்கடி முகுந்தனின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி அவன் வீட்டிற்கு வரும் சமயத்தில் தேவாவுக்கும் கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் உறவாகவும் மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

 

ஒருகட்டத்தில், இந்த திருமணத்தை மீறிய உறவு விவகாரம் முகுந்தனுக்கும் ரம்யாவுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகுந்தன், தனது நண்பனான தேவாவை கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, இனிமேல் தன்னுடைய மாமியார் கோமதியுடன் பேசக்கூடாது எனத் திட்டித் தீர்த்துள்ளார். ஆனால், இது தேவாவுக்கு வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அதே நேரம், இதையெல்லாம் கண்டுகொள்ளாத தேவா, கோமதியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இத்தகைய சூழலில், கடந்த 12 ஆம் தேதியன்று முகுந்தனும் ரம்யாவும் சினிமாவிற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட கோமதி, தேவாவை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. உடனே, தேவாவும் வீட்டிற்கு வர, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதற்கிடையில், சினிமாவிற்கு சென்ற முகுந்தன் - ரம்யா தம்பதி தங்களுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த தேவா அவர்களிடம் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார்.

 

ஒருகட்டத்தில் கோபமடைந்த முகுந்தன், தேவாவிடம் தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில், அங்கிருந்த ரம்யாவும் கோமதியும் பிரச்சனையைத் தடுக்க முயன்றனர். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.  அப்போது ஆத்திரமடைந்த தேவா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகுந்தனை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், முகுந்தன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய தேவாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே, அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு தேவா மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 

தற்போது, மாமியாரின் திருமணத்தை மீறிய உறவைத் தட்டிக் கேட்ட மருமகன், உடன் பழகிய நண்பனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.