Skip to main content

7 மாதங்களில் 25க்கும் மேற்பட்ட திருமணங்கள்; 3 மாநிலங்களை பதறவிட்ட இளம்பெண்!

Published on 21/05/2025 | Edited on 21/05/2025

 

A young woman who married more than 25 times in 7 months

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு சர்மா. இவர் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்துள்ளார். இதனை அறிந்த தரகர் பப்பு மீனா மத்தியப் பிரதேசம் போபால் பகுதியைச் சேர்ந்த அனுராதா(23)  என்ற பெண்ணை விஷ்ணு சர்மாவிற்காக பேசியுள்ளார். விஷ்ணு சர்மா மற்றும் அவரது வீட்டாருக்கும் அனுராதாவை பிடித்துப்போக, அனுராதாவிற்கும் விஷ்ணு சர்மாவை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தரகர் முன்னிலையில் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி  திருமணம் நடந்துள்ளது. திருமணத்தை ஏற்பாடு செய்துகொடுத்த தரகர் பப்பு மீனாவிற்கு ரூ.2 லட்சம் கமிஷனாக விஷ்ணு சர்மா கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் திருமணமான இரண்டே நாட்களில் மணப்பெண் அனுராதா ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.30 லட்சம் பணம் மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளார். அனுராதாவை எங்குத் தேடியும் கிடைக்காததால், சந்தேகமடைந்த விஷ்ணு சர்மா மே 3 ஆம் தேதி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பல அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்களை கண்டுபிடித்தனர்.

அதில் இளம் பெண் அனுராதா விஷ்ணு சர்மாவை போன்று தரகர் பப்பு மீனாவுடன் சேர்ந்து கொண்டு உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாதங்களில் பலரை ஏமாற்றி 7 மாதங்களில் 25க்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் திருமணமான  சில நாட்கள் கழித்து நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் அனுராதா மற்றும் அவரது மோசடி கும்பலைப் பிடிக்கத் திட்டமிட்ட ராஜஸ்தான் போலீஸ் காவலர் ஒருவரை திருமணத்திற்கு மணப்பெண் பார்ப்பவராகச் சித்தரித்து அனுராதா கும்பலுக்கு தகவல் சென்றடையும்படி செய்தனர். திருமணத்திற்கு ஒருவர் பெண் பார்க்கும் தகவல் வந்தவுடன் அனுராதா தரப்பிலிருந்து தொடர்பு கொண்டபோது ராஜஸ்தான் போலீஸ் போபாலில் வைத்து அனுராதவை கைது செய்தனர்.

அதன்பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் மஹராஜ் கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுராதா பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலுக்கு குடிபெயர்ந்து அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார். அங்குத் திருமணம் செய்து ஏமாற்றும் மோசடி கும்பலுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அதன்பிறகு பணத்திற்காக அனுராதாவும் அந்த கும்பலுடன் சேர்ந்து பல திருமண மோசடி திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த கும்பல் திருமணத்திற்கு வரன் பார்க்கும் ஆண்களைக் குறி வைத்து தங்களது மோசடி திட்டங்களை அரங்கேற்றியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மணப்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி அவர்களை திருமண வலையில் விழ வைத்திருக்கிறது. அதன்பின் இருவருக்கும் எளிய முறையில் திருமணத்தையும் நடத்தி வைத்து அந்த சேவைக்காக லட்சக்கணக்கில் கட்டணத்தை  வசூலித்துள்ளது. அதன்படி, திருமணம் நடந்த ஒரே வாரத்தில் மணமகள் வீட்டில் இருந்த பணம் நகை, விலை உயர்ந்த பொருட்களை  எடுத்து கொண்டு சென்று விடுவார். இதனையே இவர்கள் வாடிக்கையாகவும் வைத்திருக்கின்றனர்.

இதே போன்றுதான் மணமகள் போல் நடித்து அனுராதா 7 மாதங்களில் 25க்கு மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. திருமணம் முடிந்தவுடன் அனுராதா வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் அன்பாக பழகி தன்மீது நம்பிக்கை வரும்படி செய்து உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துவிட்டு பணம் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அனுராதாவிடம் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்