
திருமண விழாவின் போது நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அந்த திருமண விழாவில், உறவினரான இந்தூரைச் சேர்ந்த பர்னிதா ஜெயின் (23) என்ற இளம்பெண் கலந்துகொண்டார். வடமாநிலங்களில் பிரபலமான ‘ஹல்தி’ விழா அந்த திருமணத்திலும் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட அந்த ஹல்தி விழாவில், இந்தி பாடல் ஒன்றுக்கு பர்னிதா ஜெயின் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர், உடனடியாக பர்னிதாவுக்கு சிபிஆர் முதலுதவி கொடுக்க முயன்றார். ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்காமல் போனதால் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பர்னிதா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருமண மேடையில் இளம்பெண் பர்னிதா மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.ஏ பட்டதாரியான பர்னிதா, இந்தூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் என்பதும், பர்னிதாவின் சகோதரர் ஒருவர் தனது 12 வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.