The young man's frenzy in the temple at A triangular love affair

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (22). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும், அதே கல்லூரியைச் சேர்ந்த தீபக் (22) என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களுக்கு அபிஷேக் (26) என்ற நண்பரும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-04-24) சினேகா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, அபிஷேக், சினேகாவைசெல்போன் மூலம் தொடர்புகொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, சினேகாவும் தனது காதலர் தீபக்கை அழைத்து, அபிஷேக் கூறிய அந்த கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு, அவர்கள் 3 பேரும் சாமி தரிசனம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அபிஷேக் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காதலர்களை சுடுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதில் பதறிய சினேகாவும், தீபக்கும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் அபிஷேக், அவர்கள் இருவரையும் சரமாரியாக சுட்டுத்தள்ளினார். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, நண்பர்கள் இருவரையும் சுட்டுக்கொலை செய்த அபிஷேக் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று கோவில் வளாகத்துக்குள்ளேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சினேகாவை அபிஷேக்கும் ஒரு தலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கோண காதல் விவகாரத்தில் காதலர்கள் இருவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.