A young man take decision for blackmailed his ex lover friends in uttar pradesh

முன்னாள் காதலியின் நண்பர்கள் தன்னைமிரட்டுவதாகக் கூறி 24 வயது இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள பந்தாலாவைச் சேர்ந்தவர் 24 வயது பவன் குப்தா என்ற இளைஞர். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், டெல்லி மருத்துவமனையில் செவிலியராக வேலைப் பார்க்கும் ஒரு பெண்ணுடன் பவன் குப்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சில தினங்களுக்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் தங்களது காதலை முறித்துக் கொண்டனர்.

Advertisment

இதற்கிடையில் அந்த பெண், சர்ஃபராஸ் மற்றும் சாகில் என்ற 2 பேருடன் பழகி வந்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும், பவன் குப்தாவை தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பவன் குப்தா உதவியற்ற நிலையில் இருந்துள்ளார். துக்கம் தாங்காத பவன் குப்தா, தனது மாமாவுக்குச் சொந்தமான கட்டுமானத்தில் இருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்தனர். பவன் குப்தாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பவன் குப்தா 6 நிமிடத்திற்கு கண்ணீர் மல்க பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் தற்கொலை கடிதமும் எழுதி வைத்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பவன் குப்தா எழுதிய கடிதத்தில், ‘நான் பவன் குப்தா. சர்ஃபராஸ் மற்றும் சாகில் ஆகியோர் என்னை தொடர்ந்து மிரட்டுகிறார்கள். இந்த உலகில் நீதி ஒன்று இருந்தால், அது எனக்கு கிடைக்க வேண்டும். சர்ஃபராஸுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். என் இடத்தில் உங்கள் மகன் இருந்தால், நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்களா?. உங்கள் மகளை நீங்கள் ரொம்பவே காப்பாற்றியிருக்கீங்க, இப்போ உங்க மகன்களையும் காப்பாத்துங்க.. ஒரு பையனின் பேச்சை யாரும் கேட்பதில்லை என்பது எனக்குத் தெரியும். காவல்துறை உதவி எண்ணான 112ஐ அழைத்தேன், ஆனால் யாரும் கேட்கவில்லை’ எனக் குறிப்பிட்டார்.

இந்த தற்கொலை கடிதத்தின் அடிப்படையில், சர்ஃபராஸை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு நபரான சாகிலை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.