/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/policen_48.jpg)
உறவை பாதியில் நிறுத்திக் கொண்ட திருமணமான காதலியை, 25 வயது நபர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கெங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான ஹரிணி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹரிணிக்கும், பொறியாளர் யஷாஸ் (25) என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஹரிணி பெங்களூருவில் உள்ள ஹோட்டல் அறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹரிணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஹரிணியின் காதலன் யஷாஸ் என்பவர் அவரை கொலை செய்தார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி, அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஹரிணியின் வாழ்க்கையில், இருவரது உறவு ஒரு சிக்கலை உருவாக்கிக் கொண்டிருந்தது. இந்த உறவு ஹரிணியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. இதனால், ஹரிணியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால், அந்த உறவை முறித்துக் கொள்ள ஹரிணி முடிவு செய்தார். அதன்படி, சம்பவம் நடந்த தினத்தன்று பெங்களூருவில் உள்ள ஹோட்டல் அறையில் யஷாஸை சந்தித்து இனிமேல் இந்த உறவைத் தொடர முடியாது என ஹரிணி கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த யஷாஸ், ஹரிணியை கத்தியால் 17 முறை குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து யஷாஸை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)