
செல்லப்பிராணியாக வளர்த்த நாயை, இளைஞர் ஒருவர் கட்டி வைத்து கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் சுனில் சேபிள் (30). இவர் செல்லமாக பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கிரண், அந்த நாயின் கால்களை துணியால் கட்டி தொங்கவிட்டுள்ளார். அதன் பிறகு, கத்தியைக் கொண்டு அந்த நாயின் இடது கண்ணைக் குத்தியுள்ளார். இதனால், அந்த நாயின் கண் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொடூரமாக குத்தியதால், வலியில் அந்த நாய் அலறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விலங்கு ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், அந்த நாய் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், நாயைக் கொடூரமாக தாக்கிய கிரண் சுனில் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.