Skip to main content

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.