Yogi Adityanath's Chief Ministership in Danger

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில்,543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதிக பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணி கட்சி ஆதரவால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

Advertisment

இந்தத்தேர்தலில் பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைக் கூடகாங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. அந்த வகையில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதிலும், ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்திருந்தது. பா.ஜ.க பெரிதும் நம்பியிருந்த தொகுதியில் தோல்வியடைந்தது என்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடவையாக பார்க்கப்பட்டது.

Advertisment

இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர் கே.பி.மெளரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்தச் சூழலில் தான், கே.பி.மெளரியா நேற்று முன்தினம் (16-07-24 பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து, உ.பி பா.ஜ.க மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்தப் பரப்பரப்பான சூழ்நிலையில், உ.பி அமைச்சரவையை நேற்று (17-07-24) யோகி ஆதித்யநாத் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கே.பி மெளரியா கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், துணை முதல்வர் மெளரியா தனது எக்ஸ் பக்கத்தில் டிவீட் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அரசை விட கட்சி தான் பெரியது. தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க தலைவர்களை சந்தித்த பிறகு, மெளரியா வெளியிட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பதிவின் மூலம் யோகி ஆதித்யநாத் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை நேற்று இரவு யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment