Skip to main content

ராணா கபூருக்கு மார்ச் 11- ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகாரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வாராக் கடன்களின் அளவு மிக அதிக அளவு சென்றதால் அந்த வங்கியின் நிதி அளவு பாதாளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

YES BANK FOUNDER 4 DAYS CUSTODY MUMBAI COURT

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் அதனை தற்போது ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் யெஸ் வங்கி இனி எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. மேலும் அடுத்த முப்பது நாட்களுக்கு அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

YES BANK FOUNDER 4 DAYS CUSTODY MUMBAI COURT

இந்த நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை இன்று அதிகாலை (08/03/2020) மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்து மும்பை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நீடித்த நிலையில், ராணா கபூரின் மனைவி பிந்து கபூர் மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். 
 

அதன் பிறகு அமலாக்கத்துறையினர் ராணா கபூரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதையடுத்து யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை நான்கு நாள் (மார்ச் 11- ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளருக்கு போலீஸ் காவல்!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pranav Jewelery owner police custody

திருச்சியைத் தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி கடை செயல்பட்டு வந்தது. நகை விற்பனையுடன் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என நிர்வாகம் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் லட்சங்களில் முதலீடு செய்தனர். 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் 10000 ரூபாய், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜுவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் உரிய பணம் சென்று சேராததால் முதலீடு செய்தவர்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடியும் வந்தனர். இந்த சூழலில் நகை சேமிப்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான மதன் செல்வராஜ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். இதனையடுத்து இவரை டிசம்பர் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டிருந்தார்.

அதே சமயம் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இந்த மனு கடந்த 8 ஆம் தேதி (08.12.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. இது குறித்து 1,900க்கும் மேற்பட்டோர் புகார்கள் கொடுத்துள்ளனர். மதன் செல்வராஜ் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரது மனைவி கார்த்திகா தலைமறைவாக உள்ளார்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், கார்த்திகா ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Minister Senthil Balaji 5 days enforcement department custody

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” எனத் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி போபன்னா மற்றும் எம்.எம். சுந்தரேசன் தலைமையிலான அமர்வு முன்பு செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் இல்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டு இருந்தனர்.

 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு, நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜரானார்.

 

வழக்கு விசாரணையின் போது ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒவ்வொரு நாளும் இரு முறை பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொள்வோம் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம். மீண்டும் செந்தில் பாலாஜியை வரும் 12 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி  உத்தரவிட்டுள்ளார்.