முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த ஜந்தர் மந்தர்; மல்யுத்த வீரர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி

Wrestlers denied permission to struggle in Jandarmandar

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில்ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. டெல்லியின் முக்கியமான பகுதியானஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். ஆனால் நேற்றைய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்பைவிட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Delhi police wrestlers
இதையும் படியுங்கள்
Subscribe