கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வீரரான வா வா சுரேஷ். இவர் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சிறிய பாம்புகள் மட்டுமில்லாது கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரியவகை பாம்புகளையும் பிடிப்பதோடு மட்டுமில்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வா வா சுரேஷை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வா வா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாகவும், மோசமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியிருப்பு ஒன்றில் புகுந்த நல்ல பாம்பு ஒன்றை பிடிப்பதற்காக வா வா சுரேஷ் அழைக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக அங்கு வந்த அவர் பாம்பை பிடிக்க முற்பட்டபொழுது, எதிர்பாராத விதமாக வலது கால் தொடைப் பகுதியில் பாம்பு கடித்தது. உடனடியாக அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்டமாக அவருக்கு விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் சுய நினைவை இழந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவரை பாம்பு கடிக்கும் வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் பலர் அவர் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.