World Cup Final; Greetings from Chief Minister and Prime Minister

Advertisment

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் எப்படி விறுவிறுப்பாக இருக்குமோ அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணி உடனான போட்டியும் இருக்கும். சமீப காலங்களில் பாகிஸ்தான் அணியுடன் அதிக போட்டிகளில் விளையாடாத காரணத்தால், பாகிஸ்தான் அணி உடனான போட்டியை விட ஆஸ்திரேலியா அணி உடனான போட்டியே அதிகம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பெருநகரங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு உலகக் கோப்பை போட்டியை ரசிகர்களுக்கு திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இரண்டு இடங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரலையில் காண்பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அணி உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். 'மூன்றாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும்' என அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், 'இந்திய அணி வெற்றி பெற 140 கோடி இந்தியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்' என தெரிவித்துள்ளார்.

Advertisment