
மும்பை மின்சார ரயிலில் இருக்கைக்காக பெண்கள் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காலையில் தண்ணீர் பிடிக்க பைப்பில் வரிசையில் நிற்கும் பெண்களில் வேறு யாராவது வரிசையை மீறி தண்ணீரை மாற்றி பிடித்துவிட்டால் அது பெரும் பிரச்சனையாக மாறி சண்டையில் முடியும். முதலில் இரண்டு பெண்கள் மூலம் ஆரம்பிக்கும் சண்டை, ஒரு பெரும் பஞ்சாயத்தையே கூட்டிவிடும். இரு பெண்கள் சண்டை போட்டுக்கொள்ளும்போது, வழியில் செல்லும் அவர்களின் உறவினர்கள் பார்த்தால், “ஏய் என்ன என் உறவுக்கார பெண்ணையா அடிக்கிற...” என்ற குரலுடன் சண்டையிடும் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் இறங்க, அதை பார்த்த இன்னொரு பெண்ணின் உறவினர்கள் சம்பவத்திற்கு என்ட்ரி கொடுத்த பிறகு சொல்லவா வேண்டும், அப்புறம் என்ன அதகளம் தான். இது தமிழ்நாட்டில் என்றால் இது கொஞ்சம் அட்வான்ஸாக மாறி மும்பையில் தற்போது, ரயில் சண்டைகள் பிரபலமாகி வருகிறது.
மும்பை எப்போதுமே ஒரு கூட்ட நெரிசல் மிக்க நகரம். அங்கு பெரும்பாலான மக்கள் வேறு இடத்திற்கு செல்வதற்கு அதிகம் ரயிலில் பயணம் செய்வதையே வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதனால் மும்பையின் புறநகர் ரயில் எப்போதுமே கூட்டமாக இருக்கும் என்பதால் இருக்கைகளுக்காக வாய் வார்த்தையில் சண்டை வருவது வழக்கம். ஆனால் இதில் ஒரு படி மேலே சென்று மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் மோசமாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த 6 ஆம் தேதி மும்பையில் தானே - பன்வெல் புறநகர் மின்சார ரயிலில் இருக்கைக்காக பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்தும், பாக்ஸிங் போன்ற பஞ்ச்களால் படு பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதனைத் தடுக்க வந்த பெண் காவலரையும் விட்டு வைக்காத அந்தப் பெண்கள் அவரையும், அடித்துக் காயப்படித்தியுள்ளனர். இப்படி மாறி மாறி ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கிக் கொண்டதில் பெண் காவலர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.