Skip to main content

அதிகாரிகள் நிதி ஒதுக்காததால் பிச்சை எடுத்து கழிவறை கட்டிய பெண்!

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

 

அதிகாரிகள் இலவச கழிப்பறைக்கான நிதி ஒதுக்க மறுத்ததால், பிச்சையெடுத்த பணத்தில் கழிவறை கட்டிய பெண் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

 

பீகார் மாநிலம் சுபாவுல் மாவட்டம் பத்ரா உத்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா கட்டூன், 40. விதவைப் பெண்ணான இவர் தன் மகனுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன் வீட்டருகே கழிவறை கட்டுவதற்காக நிதி கோரி, உள்ளூர் அதிகாரிகளிடம் நிதி கோரியிருக்கிறார் அமீனா. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி அந்த அதிகாரிகள் நிதி ஒதுக்க மறுத்துள்ளனர். 

 

File Photo

 

இந்நிலையில், சொந்தமாகக் கழிவறை கட்டும் முனைப்பில் இருந்த அமீனா, அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்துவந்த பணத்தில் புதிய கழிவறை ஒன்றைக் கட்டியெழுப்பி உள்ளார். அமீனாவின் இந்த செயலுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட நிர்வாகம் பாராட்டு விழா நடத்தியுள்ளது. அப்போது பேசிய அமீனா, ‘நான் அன்றாட வாழ்விற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஏழைப்பெண். என்னிடம் கழிவறை கட்ட வசதியில்லை. திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது அவமானம். அதனால், பிச்சை எடுத்து கழிவறை கட்டினேன். அந்த வேலையில் ஈடுபட்ட கட்டிட ஊழியர்கள் என்னிடம் கூலி வாங்க மறுத்துவிட்டனர்’ எனக் கூறியுள்ளார். 

 

சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை அறிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் 2 கோடி கூடுதல் கட்டப்படும் என்றும் அறிவித்தது இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கழிவறை கட்டித் தாருங்கள்! - உண்ணாவிரதம் மேற்கொண்ட 15 வயது சிறுமி!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தூய்மை இந்தியா என்ற மத்திய அரசின் திட்டம் கொண்டுவரப்பட்டும், சுகாதாரத்தை பரவலாக்க முடியவில்லை. பல இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் பலர் மோசடியை நடத்துவதாக தகவல்கள் வருகின்றனர்.

 

திறந்தவெளிக் கழிப்பிடங்கள் சுகாதாரத்தை மட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன. இந்நிலையில், வீட்டில் கழிவறை இருக்கவேண்டிய கட்டாயத்தை உணர்ந்த 15 வயது சிறுமி கழிவறை கட்டித்தருமாறு தன் வீட்டினரையும், உள்ளாட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரைச் சேர்ந்த நிஷாராணி எனும் 10ஆம் வகுப்பு மாணவி, ‘எங்கள் பள்ளியில் கழிவறையின் தேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போதுதான் எனக்கு சுகாதாரத்தின் அவசியமே புரிந்தது. அன்றைய தினமே நான் வீட்டிற்கு வந்து கழிவறை கட்டித்தரவில்லை என்றால், உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறினேன். அதையே செய்தேன்’ என தெரிவித்துள்ளார். 

 

தற்போது உள்ளாட்சி நிர்வாகம் அவரது வீட்டில் சொந்தமாக கழிவறை ஒன்றைக் கட்டித் தந்துள்ளது. 

Next Story

பசு மாட்டின் வயிற்றில் இருந்த 80 கிலோ பாலிதீன் கழிவுகள்!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

நம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத அளவிற்கு ஓர் அங்கமாகவே மாறிவிட்டன பாலிதீன் பொருட்கள். எளிதில் மக்கிவிடாததும், அழித்து விட முடியாததுமாக இருக்கும் இந்த பாலிதீன் பொருட்களால், நம் சுற்றுச்சூழல் ஏற்கெனவே அழிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது. அதன் அதீத தாக்கத்தை மனிதர்களுக்கு முன்பாக விலங்குகள் அனுபவிக்கத் தொடங்கியிருப்பதை உணர்த்தியுள்ளது பீகாரில் நடைபெற்ற நிகழ்வு.

 

Cow

 

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், சில தினங்களுக்கு முன்னர் ஆறு வயதான பசு மாட்டிற்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதில் பசுமாட்டின் வயிற்றில் உள்ள நான்கு அடுக்களிலும் படிந்து கிடந்த 80 கிலோ பாலிதீன் பைகள் அகற்றப்பட்டுள்ளன. 

 

இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர், ‘எனது 13 வருட அனுபவத்தில் 80 கிலோ பாலிதீன் பைகளை மாட்டின் வயிற்றில் இருந்து நீக்கியது இதுவே முதல்முறை’ என தெரிவித்துள்ளார். 

 

தெருக்களில் திரியும் விலங்குகள் பல குப்பைகளில் கிடக்கும் பாலிதீன் பைகளை அப்படியே விழுங்கிவிடுகின்றன. மாடுகள் போன்ற விலங்குகள் உணவை அப்படியே விழுங்கி, பின்னர் அசைப்போடும் பழக்கம் கொண்டவை. அவற்றின் வயிற்றில் இந்த பாலிதீன் பைகள் தங்கி, பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி, இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகின்றன. 

 

பாலிதீன் போன்றவற்றால் உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகின்றன இதுபோன்ற செய்திகள். உடனடி மாற்று வழிகளைத் தேடித் தீர்வு காணாவிடில், நம் எதிர்கால சமூகம் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டி வரும் என்பதே உண்மை.