Woman who was called 'dog mafia' by judges and Court sentences her to 1 week prison

நீதிபதிகளை ‘நாய் மாஃபியா’ என்று குறிப்பிட்ட பெண்ணுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் அவருக்கு 1 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை பகுதியில் சீவுட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த சீவுட்ஸ் லிமிடெட் குடியிருப்பாளர்களிடையே, தெருநாய்களுக்கு உணவளிப்பு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்துள்ளது. இதனால் இங்கு குடியிருக்கும் லீலா வர்மா என்பவர், மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், குடியிருப்பு பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கு சில குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லீலா வர்மா தெருநாய்களுக்கு உணவளிப்பதை தடுப்பதற்கு இடைக்காலத்தடை உத்தரவை பிறப்பித்தது. இதனால் சீவுட்ஸ் குடியிருப்பாளரும், சீவுட்ஸ் வீட்டுவசதி சங்கத்தின் கலாச்சார இயக்குநருமான வினிதா ஸ்ரீநந்தன் என்பவர், நீதிமன்றத்தை கேலி செய்யும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடியிருப்பு பகுதிக்குள் பரப்பியுள்ளார்.அதில் அவர், ‘நாட்டில் ஒரு பெரிய நாய் மாஃபியா இயங்கி வருகிறது என்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நாய்களுக்கு உணவளிப்பவர்களைப் போன்ற எண்ணம் கொண்ட உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் அவர்களிடம் உள்ளது. பெரும்பாலான உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மனித உயிரின் மதிப்பை புறக்கணித்து நாய்களுக்கு உணவளிப்பவர்களைப் பாதுகாக்கிறது’ என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை குடியிருப்பு பகுதி முழுவதும் பரவியுள்ளது.

இதையடுத்து வினீதா ஸ்ரீநந்தன் எழுதி பரப்பிய சர்ச்சைக்குரிய ஆவணம் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை லீலா வர்மா மும்பை நீதிமன்றத்தில் சமர்பித்து நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பான காரணம் கேட்கும் நோட்டீஸை வினிதா ஸ்ரீநந்தனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பியது. அதன் பின்னர் வினிதா ஸ்ரீநந்தன், இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ஒரு பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இருந்தபோதிலும், இந்த மன்னிப்பு நேர்மையற்றது என்று கருதி வினிதா ஸ்ரீநந்தனுக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இது தொடர்பாக நீதிமன்றம், ‘உண்மையான வருத்தத்தை கட்டாத எந்தவொரு மன்னிப்பையும் நாங்கள் ஏற்க மாட்டோம். அவர் கூறிய மன்னிப்பு ஒரு மந்திரமாக தோன்றுகிறது. ஒரு படித்த நபரிடமிருந்து இதுபோன்ற நடத்தை, நீதித்துறை அமைப்பைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது’ என்று கூறி வினிதா ஸ்ரீநந்தனுக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனை விதித்தது. வினிதா ஸ்ரீநந்தன் விடுத்த கோரிக்கையின் பேரில், இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டு, அவருக்கான தண்டனையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.