Advertisment

ஆந்திர முதல்வர் தொகுதியில் கொடூரம்; கடனுக்காகப் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்!

Woman tied up hit debt in Andhra Pradesh Chief Minister's constituency

கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு முனிகணிப்பா என்பவரிடம் ரூ.80,000 பணத்தை கடனாக வாங்கியுள்ளார். தான் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால், திம்மராயப்பாவும் அவரது மனைவி சிரிஷாவும் தங்கள் குழந்தைகளுடன் அந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊரில் குடியேறியுள்ளனர்.

இருப்பினும், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகவும், கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவும் சிரிஷா தினசரி கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனது குழந்தையின் பள்ளிச் சான்றிதழ்களை வாங்குவதற்காக தனது சொந்த கிராமமான நாராயணபுரத்திற்கு சிரிஷா தனது இரண்டு குழந்தைகளுடன் நேற்று (16-06-25) மதியம் 1 மணியளவில் வந்துள்ளார். அப்போது சிரிஷாவை கண்ட முனிகண்ணப்பா தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். மேலும், சிரிஷாவை தரதரவென இழுத்துச் சென்று வேப்ப மரத்தில் கயிறுகளால் கட்டி குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் உள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள், தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்ய முயன்றனர். முனிகண்ணப்பா, அவர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக முனிகண்ணப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Andhra Pradesh loan viral video woman
இதையும் படியுங்கள்
Subscribe